என்னை கவர்ந்த நிஜ மனிதர்கள்.

என்னை கவர்ந்த நிஜ மனிதர்கள்.

ஸ்ரீமத் இராமானுஜன்.

உடையவர் என்றும் எதிராஜர் என்றும் இவர் அழைக்கப்படுகிறார். ஸ்ரீபாஷ்யம் என்ற விஷிட்டாத்வைத உரையை இவர் எழுதியதால் "பாஷ்யகாரர்" என்றும் அழைக்கப்படுகிறார். கி.பி. 1017 ல் பிறந்த இவர் மிகச்சிறந்த அறிவாளியாகவும், ஜாதிகளுக்குள் குறுகி போகாத‌ பரந்த எண்ணங்களை கொண்டவராகவும் இருந்தார்.

இவர் பிறந்த காலம் ஜாதிக்கட்டுபாடுகள் மிக அதிகமாய் உலா வந்து கொண்டிருந்த நேரம்.
இராமானுஜர் ஜாதிகளை கடந்தவராய் இருந்தார். இறைவனிடம் அர்ப்பனிப்பு உணர்வே மிக முக்கியம் என நம்பினார். சிறு வயதில் விஷ்னுவுக்கு சேவை செய்யும் கஞ்சிபூர்னா எனும் தாழ்த்தப்பட்ட குலத்தை சேர்ந்த ஒருவரின் அர்ப்பனிப்பு உணர்வில் மயங்கி, அவர் தமக்கு குருவாக வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். பின்நாளில் அந்த கஞ்சிபூர்னா என்பவர்தான் இராமானுஜருக்கு "யமுனாசார்யா" எனப்படும் வைணவ குருவை சந்திக்குமாறு பரிந்துரைக்கிறார். அங்கு சென்றதன் விளைவால் தான் இராமானுஜர், பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதி பாஷ்ய (உரை) காரர் என்று அழைக்க‌ப்படுகிறார்.

இராமானுஜர் மிகச் சிறந்த அறிஞர், ஞானி, வேத விற்பன்னர், அவரின் தத்துவ ரீதியான பங்களிப்பை பற்றி எழுதி தீராது. அவற்றை விளக்க நமக்கு அறிவும் போதாது. ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மேலாக‌, அவர் ஒரு சிறந்த மனிதராய் இருந்தார். குறிப்பாக நம் நாட்டில் தீண்டாமைக்கு எதிராக போரிட்ட முதல் மனிதர் என்று அவரை சொன்னால் மிகை ஆகாது.

இராமானுஜர் திருமந்திரத்தின் இரகசியத்தை அறிய 18 முறை திருக்கோட்டியூர் நம்பியிட‌ம் செல்கிறார். 18வது முறை அதை உபதேசித்த திருக்கோட்டியூர் நம்பி, அதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று இராமானுஜரிடம் சத்தியம் வாங்குகிறார். அந்த திருமந்திரத்தை கேட்பவர்களுக்கு வைகுண்டம் கிடைக்கும் என்ற ஆழமான நம்பிக்கை இருந்தது. ஆனால் குருவிடம் சத்தியம் செய்துவிட்டு அதை யாருக்காவது வெளிப்படுத்தினால் அவர்கள் நரகத் தீயில் தள்ளப்படுவார்கள் என்று சாஸ்திரமும் இருந்தது.

இராமானுஜர் திருமந்திரத்தை பெற்றுக்கொண்டு வருக்கிறார் என்ற செய்தியும் பரவியது. பலர் கூடி இராமானுஜரை அதை குறித்து கேட்டனர். இராமானுஜரோ அவர்களை திருக்கோஷ்டியூரில் உள்ள தெற்காழ்வான் மண்டபத்திற்கு அழைத்து அந்த திருமந்திரத்தை வெளிப்படுத்தினார்.

பதறி போய் ஓடிவந்தார் திருக்கோட்டியூர் நம்பி, "என்ன பாதகம் செய்தாயடா இராமானுஜா, உனக்கு நரகத்தீ உறுதி" என்றார். இராமானுஜர் பனிவோடு சொன்னார், " மன்னியுங்கள் குருவே, திருமந்திரத்தின் சக்தியை நான் அறிவேன், ஆனால் நான் ஒருவன் நரகத்தீயில் வீழ்ந்தால் என்ன, இத்தனை பேர் நற்கதி அடைகிறார்களே" என்று.

இராமானுஜர் திருமலை மேல்கோட்டை போன்ற பல கோவில்களை வைனவ முறைப்படி புனரமைத்தார். அவர் மிகச்சிறந்த சமூக சீர்திருத்த வாதியாக திகழ்ந்தார். ஜாதிகளை கடந்து அனைவரையும் ஸ்ரீ வைஷ்னவர்களாக மாற்றி, அவர்களுக்கு தமிழ் வேதம் என்று சொல்லப்படுகிற திவ்ய பிரபந்தத்தை சொல்லிக் கொடுத்தார். அவர் நம் நாடு முழுதும், 74 ஆச்சார்யர்களை (சிம்ஹாசன அதிபதிகளை) நிறுவி ஸ்ரீ வைஷ்னவத்தை வளரச் செய்தார்.

"அடியவனுக்கு அடியவன்" எனும் உயர்ந்த தத்துவத்தை கொண்ட ஸ்ரீ வைஷ்னவத்தை அருளி, இறைவனிடம் சரணாகதி அடைவதுதான் சாலச் சிறந்தது என்பதை அவர் வ‌லியுறுத்தினார்.

சுயநலமில்லாத பரந்த நோக்க முடைய ஒரு சனாதன தர்மிக்கு சிறந்த எடுத்துக்காட்டு இராமானுஜன்

----------------------------------------------------------------------------------------------------------------

வீர சிவாஜி

எந்த பெயரை உச்சரிக்கும் போது உங்கள் உடல் சிலிர்க்குமோ, தலை நிமிருமோ, நெஞ்சத்தில் வீரம் துளிர்க்குமோ, அந்த பெயர் "சிவாஜி".

இந்தியாவை 700 ஆண்டுகளாய் கொடுரமாய் ஆட்சி செய்து வந்தனர் அரேபிய, துருக்கிய மற்றும் ஆப்கானிய வெறியர்கள். ஹிந்துக்கள் மற்றும் புத்த, ஜைன மதத்தினரின் ஆயிரக்கணக்கான வருட பாரம்பரிய கலாச்சாரத்தை குலைத்து அவர்களின் இலக்கியங்களையும், புத்தகங்களையும் அழித்து, அவர்களின் நாகரீகத்தையே நாசப்படுத்திய அந்த கொள்ளையர்கள் அகண்ட பாரதத்தின் வடக்கிலும், மேற்கிலும், கிழக்கிலும் முழுவதுமாய் பரவி தென்னகத்தின் கடைசி எல்லையை நோக்கி விரிந்துக் கொண்டிருந்தனர். அவர்களை எதிர்ப்பதற்கு யாருக்கும் துணிவில்லை, தட்டி கேட்க யாராலும் முடியவில்லை. சிவாஜி என்ற சிங்கம் பிறக்கும் வரை.

தீயது மிக வேகமாய் பரவும் ஆனால் சீக்கிரம் அழிந்துவிடும் என்று சொல்வார்கள். கொடுங்கோலன் ஔரங்கசீப் அவ்வாறுதான் வேகமாய் பரவினான். பாபர் என்ற கொள்ளையனின் வழி வந்த ஔரங்கசீப்பை கொடுமைகளின் எல்லையாக சொல்லலாம். சிவாஜியின் சரித்திரத்தை பார்க்கும் முன் நாம் ஔரங்க்சீப் உடைய கொடுமைகளை பார்த்தாக வேண்டும்.

ஹாஜஹான் என்ற கேளிக்கை மற்றும் பெண்பித்தன் தன்னுடைய ஏழு மனைவிகளில் ஒருவளான மும்தாஜ் மஹாலுக்கு அவளின் இறப்பிற்கு பின் பிரமாண்டமான மாளிகைகள் கட்டியும், பல கேளிக்கை விடுதிகள், மண்டபங்கள் என மக்கள் வரிப் பணத்தால் சேர்க்கப்பட்ட‌ கஜானாவை, காலி செய்து கொண்டிருந்தான். அவனுக்கும் மும்தாஜுக்கும் 14 குழந்தைகள் அதில் ஒருவன்தான், விஷப்பாம்பை விட கொடியவனான ஔரங்கசீப். எப்போதும் கேளிக்கையிலும் பெண் பித்தத்திலும் திரிந்துக் கொண்டிருந்த தகப்பன் ஷாஜகான் ஔரங்கசீப்பை கண்டுகொள்ளவில்லை. சிறு வயதிலேயே அவன் குரானையும், ஹடீத்தையும் கற்றான். அரேபிய மற்றும் பாரசீக கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டு மூளை சலவை செய்யப்பட்ட அவன், ஒருவன் மோசமான கல்வியால் எத்தனை பயங்கரமானவனாக மாறுவான் என்பதற்கு அருமையான உதாரணம்.

கொடூரமான எண்ணம் கொண்ட அவன் ஆட்சியை பிடிப்பதில் மிகவும் கவணமாக இருந்தான. தன்னுடைய மூத்த சகோதரனான "தாரா ஷிகோ" என்பவனை கட்டி இழுத்து வந்து கொன்றும், மற்ற சகோதர்களையும், தன் தந்தையையும் சிறையில் அடைத்தும் ஆட்சிக்கு வந்தான் ஔரங்கசீப். அவன் தன் ஆட்சியில் குடியையும், கேளிக்கையும் மட்டும் அல்ல, நல்ல இசையையும் தடை செய்தான். அவனுடைய ஆட்சியில் பயங்கரமான யுத்தங்கள் நடந்தன, வெறித்தனமான அவனின் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் பலரும் அவனுக்கு அஞ்சினர். அவன் ஆட்சி நாலா பக்கங்களிலும் விரிந்தது.

மதவெறியனான ஔரங்கசீப்பை, சிந்துவிலும், முல்தானிலும், பனாரஸ்ஸிலும் ஹிந்து பண்டிதர்களின் சொற்பொழிவுக்கு பல இஸ்லாமியர்கள் ஆயிரக்கணக்கில் செல்வது, கோபத்தை தூண்டியது. அவன் அவனுடைய சுபதார்களை அப்படிப்பட்ட மடங்கள், ஆசிரமங்கள் ஆகியவற்றை மொத்தமாக அழிக்க உத்தரவிட்டான். சுஃபி துறவியான "சர்மத் கஷானி" என்பவரை அரசியல் ஆதாயங்களுக்காகவும், ஒன்பதாவது சீக்கிய குருவான "தேஜ் பகதூர்" என்பவரை அவனின் "கட்டாய மதமாற்றத்தை எதிர்த்ததற்கும்" கொன்றான். வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி கிட்டத்தட்ட 60000 ஹிந்து மற்றும் புத்த கோவில்களை அவன் அழித்தான். அதில் பிரசித்திப் பெற்ற காசி விஸ்வநாதர் கோவில், கேசவ் தியோ கோவில் மற்றும் சோமநாதர் கோவில் ஆகியவை அடக்கம்.

இத்தகைய சூழ்நிலையில் தான் மஹாராஷ்ட்ரத்தின், இன்றைய பூனேவுக்கு அருகில், ஷிவ்நேரி என்ற மலைக்கொட்டையில் ஒரு குழந்தை பிறந்தது. அதற்கு "சிவாஜி" என்று பெயரிட்டனர். விஜயநகரத்தை வீழ்த்திய‌ பிறகு அந்த பிரதேசத்தை, பீஜாப்பூர், கோல்கொண்டா, அஹம்மத்நகர் என்ற‌ மூன்று சுல்தான்கள் ஆண்டுக் கொண்டிருந்தனர்.
முகலாய சாம்ராஜ்யத்திற்கும், சுல்தான்களுக்கும் சமாதான உடன்படிக்கை நிலுவையில் இருந்தது.

அவரின் தந்தை ஷாஜி போஸ்லே, பெங்களூரில் இந்த சுல்தான்களின் ஆளுமைக்கு உட்பட்ட, ஆனால் தனி அதிகாரம் கொண்ட ஒரு படைக்கு தலைவராக இருந்தார். பூனேவில் இருந்த சிவாஜியோ அம்மா ஜீஜாபாயின் பாசப் பினைபில் வளர்ந்தார். தாயின் பக்தி நெறியுடன் வளர்க்கப்பட்டார். மஹாபாரதத்தையும், இராமாயனத்தையும் விரும்பி படித்தார். அவருடைய வாழ்க்கையில் அந்த புத்தகங்களின் தாக்கம் மிகப்பெரிய பங்கை ஆற்றியது. ஹிந்து மதம் மற்றும் இஸ்லாமிய சுஃபி துறவிகளுடைய தொடர்புகளும் அவருக்கு தொடர்ந்து ஏற்பட்டது. சிறு வயதிலேயே அந்த பகுதியில் இருந்த காடுகளில் அவர் தன்னந்தனியாக சுற்றுவார். காடுகள் மற்றும் மலைகளை ரசிப்பார், அவற்றின் ரகசியங்களை தெரிந்து கொள்வார். தன்னுடைய பண்ணிரண்டாம் வயதில் அவர் பெங்களூருக்கு கூட்டி செல்லப்பட்டு அங்கிருந்த தன் சகோதரர் சம்பாஜியுடன் இனைந்து போர் யுக்திகளை முறைப்படி கற்றுக் கொண்டார்.

சின்னஞ் சிறுவனாகிய சிவாஜி எப்படி மாபெரும் முகலாய சாம்ராஜ்யத்தை எதிர்த்து போரிட்டான் ? துணிவும், விவேகமும் உள்ளவனுக்கு எதுவும் சாத்தியம் என்று எப்படி நிருபித்தான் ?
சிவாஜி என்ற அந்த சிங்கக்குட்டி மெல்ல கர்ஜிக்க தொடங்கியது. சிறுநாய்கள் குலை நடுங்க தொடங்கும் காலமும் வந்தது.

சிவாஜி தன்னுடைய 16ம் வயதில் பீஜாப்பூரின் ஒரு தளபதியான 'இணயத் கான்' என்பவனுக்கு பரிசுகளும், பணமும் கொடுத்து அவனுடைய கைவசம் இருந்த 'டொர்னா' கோட்டையை கையகப்படுத்திக் கொண்டார். அது போலவே 'சக்கன்' மற்றும் 'கொண்டனா' என்ற கோட்டைகளையும் அவர் கைபற்றிக் கொண்டார்.

சிவாஜியின் வளர்ச்சியை பிடிக்காத 'முஹம்மத் ஆடில் ஷா' என்பவன், சிவாஜியை கட்டுப்படுத்த அவரின் தந்தையை கைது செய்து வைத்தான். ஆடில் ஷா, ஃபாரத்கான் என்பவன் தலைமையில் சிவாஜியின் சகோதரர் சம்பாஜியை எதிர்த்து ஒரு படையை அனுப்பினான். சம்பாஜி அதை எதிர்த்து தோற்கடித்தார். இதன் நடுவே சிவாஜி, அப்போதைய டெக்கான் கவர்ணராக இருந்த ஷாஜகானுடைய மகன் முரத் பக்ஷ்க்கு தன்னுடைய விசுவாசத்தை தெரிவித்து ஒரு கடிதம் எழுதி, தன் தந்தையை விடுவிக்குமாறு கேட்டார். முகலாயர்கள் சிவாஜியை தங்களின் விசுவாசி என்று கருதி, அவர் தந்தையை விடுவிக்குமாறு ஆடில் ஹாவை நிர்பந்தித்தார்கள். அவர் தந்தை விடுதலை அடைந்தார்.

1659ல் ஆடில் ஷா, அப்சல் கான் என்ற அனுபவம் மிகுந்த ஒரு தளபதியை சிவாஜியை அழிப்பதற்காகவும் அவர் ஒரு பிராந்திய சக்தியாக வளர்வதை தடுப்பதற்காகவும் அனுப்பினான். சிவாஜியோ பெரும்பாலும் மலைகளிலும், காடுகளிலும் தன் படைகளை வைத்திருந்தார். அஃப்சல் கான் துல்ஜாபூரி மற்றும் பந்தர்பூர் ஆகிய இடங்களில் இருந்த ஹிந்து கோவில்களை மிக மோசமான முறையில் சேதப்படுத்தினான். இப்படி செய்வதால் சிவாஜி சமநிலத்துக்கு வருவார் என்றும், அங்கு வைத்து அவரை தன்னுடைய மிகப்பெரிய பீஜாப்பூர் சேனையை வைத்து அழித்துவிடலாம் என்றும் திட்டம் தீட்டினான். சிவாஜி அஃப்சல் கானை தனியாக சந்தித்து பேசி சிக்கல்களை தீர்த்துக்கொள்ள விரும்புவதாக ஒரு கடிதம் எழுதினார். இருவரும் 'ப்ரதாப்காட் கோட்டையின்' கீழே உள்ள குடிசையில் சந்தித்துக் கொண்டனர். அந்த ஒப்பந்தம் எப்படி என்றால் இருவரும் ஒரே ஒரு வாளோடும் ஒரு உதவியாளனோடும் வருவதாய் இருந்தது. சிவாஜி அஃப்சல் கான் தன்னை தாக்கக்கூடும் என்று யூகித்து, தன் உடைக்குள் கவச உடை அணிந்து சென்றார். ஒரு உலோகத்தால் செய்யப்பட்ட புலிப்பல்லும் தன் இடது கையில் வைத்திருந்தார். ஒரு சிறு கத்தியை தனது வலது கையில் வைத்திருந்தார். அவர் எதிர்பார்த்த படியே அஃப்சல் கான் தன் சிறு கத்தியால் சிவாஜியை குத்தவும், அது அவரின் கவச உடையில் தடுக்கப்பட்டது, சுதாரித்த சிவாஜி அவனை தன் கத்தியால் குத்தி கொன்றார். சிவாஜி மறைந்திருந்த தன் வீரர்களை பீஜாப்பூர் சேனையை தாக்கும்படி சைகை செய்தார்.

சிவாஜியின் பயிற்சிபெற்ற வீரர்கள், பீஜாப்பூர் சுல்தானின் படையை சூரையாடின. அவர்கள் என்ன நடக்கிறது என்று சுதாரிக்கும் முன்னேயே, அதிர வைக்கும் தாக்குதல் நடந்தது. சுல்தானின் 3000 வீரர்கள் இறந்தனர், அஃப்சல் கானின் இரு மகன்கள் சிறையெடுக்கப் பட்டனர். இந்த எதிர்பார்க்காத வெற்றி சிவாஜியை ஒரு மராத்திய நாயகன் ஆக்கியது. கைப்பற்றப்பட்ட ஆயுதங்களும், குதிரைகளும், கவசங்கள் மற்றும் பல பொருள்கள் மராத்திய சேனையை பலப்படுத்தின. முகலாய அரசன் ஔரங்கசீப் இப்போதுதான் சிவாஜி ஒரு பெரும் அபாயம் என்பதை உணர்ந்தான்.

இந்த இழப்பை ஈடுசெய்ய, பத்தாயிரம் பேர் கொண்ட ஒரு சேனையை 'ருஷ்டம்ஜமான்' என்பவன் தலைமையில் அனுப்பினார்கள். சிவாஜியிடமோ 5000 வீரர்கள்தான் இருந்தனர். சிவாஜி அவர்களை கோலாபூர் எனும் இடத்தில் தாக்கினார். ஒரு திடீர் யுக்தியாக சிவாஜியின் சேனைகள் மூன்றாக பிரிந்தது, நடுவில் மிகப்பலத்தோடு சிவாஜியின் தலைமையில் ஒரு படை தாக்கியது. அவரின் குதிரைப்படைகள் எதிரியின் இரண்டு ஓரங்களிலும் சுற்றி வந்து தாக்கியது. பல மணி நேரம் நடந்த சண்டையில் பீஜாப்பூர் சேனைகள் தோற்கடிக்கப்பட்டன. ருஷ்டம்ஜமான் தப்பித்து ஓடினான். ஆடில் ஷாவின் சேனைகள் 2000 குதிரைகள் மற்றும் 12 யானைகளை மராத்தியர் வசம் இழந்தன. இந்த வெற்றி "மலை எலி" என்று ஔரங்கசீப்பால் கேலியாக அழைக்கப்பட்ட சிவாஜியை மேலும் உயர்த்தியது.

ஆடில்ஷா இதன் பின்னர் சித்தி ஜௌஹர் என்ற தளபதியை அனுப்பினான். முகலாயர்கள் வடக்கிலும், ஆடில்ஷா வின் படை தெற்கிலுமாய் ஒருமித்து சிவாஜியின் படையை தாக்கியது. சிவாஜியின் கோட்டைகளை அவர்கள் கைப்பற்றினாலும், சிவாஜி தப்பித்து வேறு இடம் சென்றார். சித்தி ஜௌஹர், ஆங்கிலேயர்களிடம் இருந்து க்ரேனேடுகளை வாங்கி சில வெள்ளையர்களை வைத்து சிவாஜியின் கோட்டையை தகர்க்க உத்தரவிட்டான். இதனால் கோபமடைந்த சிவாஜி வெள்ளையர்களின் ராஜாபூர் வெடிமருந்து தொழிற்சாலையை கொள்ளை அடித்து, பலரை சிறைப் பிடித்தார் சிவாஜி.

பவன் கிந்த் எனும் போரில், எதிரிகள் சிவாஜியை நெருங்கிவிட்ட சூழ்நிலையில், சிவாஜி தோல்வியை தடுக்கவும், அங்கிருந்து தப்பிக்கவும் நினைத்தார். "பந்தல் தேஷ்முக்" என்ற அற்புதமான மராத்திய தளபதி வெறும் 300 வீரர்களோடு எதிர்வரும் படையை தடுத்தி நிறுத்தி, சிவாஜியை தப்பிக்க வைத்து சாகும் வரை சண்டையிட்டார். கிடைத்த நேரத்தில் சிவாஜி தன்னுடைய படையுடன் விஷல்காத் கோட்டையை பத்திரமாய் அடைந்தார். இந்த சண்டையில் சாதாரண கட்டைகள் மற்றும் கத்திகளுடன் எதிரிகளை பவன் கிந்த் ஏழு மணி நேரம் தடுத்தி நிறுத்தி, சிவாஜி தப்பித்து செல்லும் வரை சண்டையிட்டார். பிஜு ப்ரபு தேஷ்பாண்டே எனும் வீரர், பலத்த காயத்துடனும் சிவாஜி பத்திரமாக கோட்டையை அடைந்துவிட்டார், எனும் பீரங்கி சமிக்ஞை கிடைக்கும்வரை சண்டையிட்டார். இந்த போரில் 300 மராத்தியர்களும் , 3000 ஆடில்ஷாவின் வீரர்களும் கொல்லப்பட்டார்கள். இதன் பின்னர், சிவாஜிக்கும் ஆடில்ஷாவுக்கும் உடன்படிக்கை ஏற்பட்டது. பவன் கிந்த், தேஷ்பாண்டே மற்றும் மற்ற வீரர்களின் தியாகத்துக்கு நன்றியாக "பவன்கிந்த் சாலை" என்று அந்த மலை வழிக்கு பெயர் வைத்தார் சிவாஜி. சிவாஜியின் வெற்றிக்கு பின் அவருக்கு விசுவாசமான பலர் இருந்தது முக்கிய காரணமாயிருந்தது. அவரும் எல்லொருடைய அன்புக்கு பாத்திரமாய் இருந்தார். தன் மக்களுக்காக எதை செய்யவும் தயாராகவும் இருந்தார்.

இதன் பிறகு சிவாஜி முகலாயர்கள் மீது வெளிப்படையாய தன் ஆற்றலை வெளிப்படுத்த துவங்கினார். அஹ்மத்நகர் மீது அவர் தாக்குதல் நடத்தி பல குதிரைகளையும் கைப்பற்றினார். பீஜாப்பூர் சுல்தானின் வேண்டுகோளுக்கு இணங்கி
ஔரங்கசீப் அவனின் மாமா "ஷைஷ்டா கான் தலைமையில், 3,00,000 வீரர்களையும், குதிரைப்படையையும் அனுப்பி வைத்தான். அவர்கள் மிக பெரிய பலத்துடன் சிவாஜியின் கோட்டையையும், அவரின் அரண்மனையும் பிடித்தார்கள்.
சிவாஜியும் சில வீரர்களும் எப்படியோ தப்பித்து, ஒரு கல்யான கும்பல் போல் வேடமணிந்து, ஷைஷ்டா கானின் பாதுகாவலர்களை கொன்று அவனின் வசிப்பிடத்தை ஊடுறுவி, அவ‌னை தாக்கினார்கள். அவன் அத்தாக்குதலில் தன் மகன்களையும், தன் கை விரலையும் இழந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஔரங்கசிப்பிடம் ஓடினான். ஔரங்கசிப் கோபத்தில் அவனை பெங்காலுக்கு மாற்றினான்.

அடுத்து முகல்களின் 'கர்தாலப் கான்' எனும் தளபதி 30000 முகல் படையுடன் போருக்கு வந்தான். அவர்களையும் உம்பர்கிந்த் என்ற இடத்தில் வைத்து சிவாஜியின் சேனைகள் கடுமையான தாக்கின. தங்கள் தளவாடங்கள் அனைத்தையும் சிவாஜியிடம் தந்துவிட்டு உயிர்பிச்சை கேட்டு ஒடினார்கள் அவர்கள். மேலும் உக்கிரம் அடைந்த சிவாஜி, தன் கஜானாவை நிறப்புவதற்காகவும், முகலாயர்களின் வர்த்தக நகரமான சூரத்தை தாக்கினார்.

ஔரங்கசீப் சிவாஜியை தாக்க‌ முதலாம் ஜெய்சிங் என்பவனை அனுப்பினான். அவனும் பெரும் படையுடன் சிவாஜியின் படைகளை தாக்கி அவருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தினான். இதனால் சிவாஜி ஔரங்கசிப்புடன் சமாதான உடன்படிக்கை செய்துக்கொண்டார். சிவாஜியையும் அவர் 8 வயது மகன் சம்பாஜியையும் ஔரங்கசீப் தன் அரண்மனைக்கு வரவழைத்தான். அங்கு சிவாஜியை அவன் மற்ற சாதாரண தளபதிகளுடன் சமமாக வைத்தது அவரின் சுயமரியாதையை பாதித்தது. மற்றும் ஔரங்கசிப் சிவாஜியை கொல்லக்கூடும் அல்லது அவரை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி விடக் கூடும் என்ற செய்தி, ஒற்றர்கள் மூலமாக சிவாஜிக்கு வந்தது. சிவாஜியும், சம்பாஜியும் பழக்கூடைகளுக்கு நடுவே ஒளிந்து அங்கிருந்து தப்பித்தார்.

1670ல் சிவாஜி முகலாயர்கள் மேல் மிகப்பெறும் தாக்குதலை செய்தார். அதன் மூலம் பல இடங்களையும், இழந்த கோட்டைகளையும் கைப்பற்றினார். சூரத்தை மீண்டும் அவர் சூரையாடினார். அவர் அவ்வாறு செய்துவிட்டு திரும்புகையில் தாவுத் கான் என்ற முகலாய தளபதி அவர் படையை வழிமறித்தான். அவர்களையும் சிவாஜியின் படை இன்றைய நாசிக் என்ற இடத்தில் அடித்து விரட்டியது. அதே போல் ராணுவ தளவாடங்களை தர மறுத்த பிரிட்டீஷ் காரர்களையும் சிவாஜி பம்பாயில் தாக்கினார். அதன் பின் ஆடில்ஷாவின் படைகளுடன் பல போர்கள் நடந்தன. ஆனால் சிவாஜியின் பலத்தைதான் அவை கூட்டின. சிவாஜியின் பலம் மேலும் மேலும் கூடி அவர் மிகப்பெரும் மராத்திய சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி ஆனார். அவர் படைகள் தெற்கே ஆடில்ஷாவின் இன்றைய கர்நாடகத்தின் பல இடங்களை கைப்பற்றி, தமிழ்நாட்டின் வேலூர் வரை ஆடில்ஷாவின் இடங்களை பிடித்தார். ஔரங்கசீப்பால் சாகும் வரை சிவாஜியை ஒன்றும் செய்ய முடியவில்லை, அவனுக்கு அவர் ஒரு சிம்ம சொப்பனமாகவே இருந்தார்.

சிவாஜி மதிநுட்பத்தின் சின்னமாக இருந்தார். கொரில்லா போர் முறைகளை உலகத்தில் முதல் முதலில் பயன்படுத்தியவர் சிவாஜி என்றால் மிகையாகாது. வஞ்சகர்களை வஞ்சகமாகத்தான் கையாள‌ வேண்டும் என்று நமக்கு சொல்லிக்கொடுத்தவர் சிவாஜி. இன்று நம்மை போன்றவர்கள் அர‌பிய மற்றும் துருக்கிய அடிமைகள் ஆகாமல், நம் தர்மத்தின் வழி செல்ல முடிகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் சிவாஜி


எனக்கு பிடித்த நிஜ மனிதர்கள் " சந்தீப் உண்ணிக் கிருஷ்ணன்".


சச்சின் டெண்டுல்கரை நமக்கு தெரியும், "சந்தீப் உண்ணிக் கிருஷ்ணனை" எத்தனை பேருக்கு தெரியும் ?

சந்தீப் பூனேயில் உள்ள 'நேஷனல் டிஃபன்ஸ் அகாடமியில்' பயிற்சி பெற்றார். அதன் பின்னர் பீஹார் ரெஜிமென்டில் பணியாற்றிய சந்தீப், இந்திய இராணுவத்தில் ஜம்மு காஷ்மீர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் எல்லை பாதுகாப்பில் திறம்பட பணியாற்றினார். பின்னர். "நேஷனல் செக்யூரிட்டி கார்ட்ஸ்" எனப்படும் சிறப்பு பிரிவில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, பயிற்சி முடிந்தபின், "ஸ்பெஷல் ஆக்ஷன் க்ரூப்" எனப்படும் சிறப்பு அதிரடி படையின் பல கடுமையான, துணிச்சலான, பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டார். கார்கில் போரிலும், பல மோதல்களில், தன்னை நாட்டுக்காக ஈடுபடுத்திக் கொண்ட பெருமையை உடையவர் மேஜர் சந்தீப் உண்ணிக்கிருஷ்ணன்.

பம்பாய் தாஜ் ஓட்டலுக்கு, அழிவு நாடான பாகிஸ்தானிலிருந்து வந்த தீவிரவாதிகள், அப்பாவி மக்களை பினைக் கைதிக‌ளாக வைத்துக் கொண்டு, தங்கள் வெறியாட்டத்தை நிகழ்த்திக் கொண்டிருந்த போது, அதிலிருந்து அந்த பினைக் கைதிகளையும், இந்த தேசத்தின் மானத்தையும் காப்பாற்றுவதற்காக அனுப்பப்பட்டவர்கள், "ஸ்பெஷல் ஆக்ஷன் க்ரூப்" எனப்படும் "சிறப்பு அதிரடை படையினர். அந்த சிறப்பு அதிரடிப் படையினர், மக்களை மீட்பதற்காகவும், தீவிரவாதிகளை அழிப்பதற்காகவும் "ஆப்பரேஷன் ப்ளாக் டோர்னேடோ" என்று அழைக்கப்பட்ட ஒரு செயல்திட்டத்தை நடத்தினர். அந்த அதிரடைப் படைக்கு தலைமை தாங்கியவர்தான் 31 வயதே ஆன, சந்தீப் உண்ணிக் கிருஷ்ணன்.

26, நவம்பர் 2008 நள்ளிரவில், தாஜ் மஹால் ஹோட்டலை தீவிரவாதிகள் ஊடுறுவி, பல அப்பாவி மக்களை கேடயமாக வைத்துக் கொண்டும் நாசச் செயல் புரிந்துக் கொண்டு இருக்கையில், ஸ்பெஷல் ஆக்ஷன் க்ரூப் வரவழைக்கப்பட்டது.
பயங்கரமான் வெடிகுண்டுகள் மற்றும் கையெறி குண்டுக‌ளோடும், நவீன ரக துப்பாக்களோடும் கொலை வெறி தாண்டவம் புரிந்துக் கொண்டிருந்தனர் தீவிரவாதிகள். மேஜர் சந்தீப்பும் அவரின் குழுவினரும் ஆறாவது மாடியை படிகட்டுகள் வழியாக நெருங்கிவிட்டிருந்த வேளையில், கீழே மூன்றாவது தளத்தில் தீவிரவாதிகள் இருப்பது அவர்களுக்கு தெரிய வந்தது. தீவிரவாதிகள் சில பெண்களை பினைக்கைதிகளாக ஒரு அறையில் உள் வைத்து உட்புறமாக பூட்டிக் கொண்டிருந்தனர். அதை அவர்கள் நெருங்கிய வேளையில், தீவிரவாதிகளின் திடீர் தொடர் துப்பாக்கி வெடியில் கமேண்டோ "சுனில் யாதவ்" காயமுற்றார். மேஜர் சந்தீப் உன்னிக்கிருஷ்ணன் தன் கூட்டத்தை பின் செல்லுமாறு பணித்து, தான் முன் சென்று தீவிரமான தாக்குதலில் ஈடுபட்டார். இப்படி அவர் செய்ததன் மூலமாக காலில் காயமுற்ற சுனில் யாதவை காப்பாற்றி மீட்க முடிந்தது. அவரின் ஆக்ரோஷமான தாக்குதலை சமாளிக்க முடியாமல் தீவிரவாதிகள் மற்றொரு தளத்திற்கு தப்பித்து ஓடினர்.

தன்னந்தனியாக அவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தியவாறு சென்ற மேஜர் சந்தீப், பின் பக்கத்திலிருந்து வந்த தாக்குதலால், படுகாயமடைந்தார். அவரின் உயிர் பாரத‌ மண்ணுக்காக வீழ்ந்தது. அவரின் உடல் விதைக்கப்பட்டது.

பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான தீவிரவாதிகளில், பொறுக்கி எடுக்கப்பட்டு அனுப்பப்பட்டது பத்து தீவிரவாதிகள். அவர்க‌ளில் நால்வர் தாஜ் ஹோட்டலில் அழிக்கப்பட்டனர். 300 மக்கள் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களில் பல வெளிநாட்டு தலைவர்களும் அடங்குவார்கள்.

கடைசியாக மேஜர் சந்தீப் உண்ணிக்கிருஷ்ணன் சொன்ன வார்த்தைகள் "நீங்கள் யாரும் வராதீர்கள், நான் அவர்களை பார்த்துக் கொள்கிறேன்" (Don’t come up, I will handle them) என்பதுதான். இந்த தாக்குதலில் அவரோடு கஜேந்திர சிங் என்ற மற்றொரு இந்திய வீரரும் உயிரை நாட்டுக்கு அர்பித்தார்.

நாம் பாதுகாப்பாக இருப்பதற்காக, தங்கள் இளமையை, வாழ்வை, உயிரை அர்ப்பனித்த இத்தகைய மாவீரர்களை இந்திய குடிமகன்களாகிய நாம் எப்போதும் நெஞ்சில் நிறுத்த‌ வேண்டும். இவர்களின் தியாகத்தை நாம் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நமக்காக, நம் பாதுகாப்புக்காக, எங்கோ எல்லையில் மடிகிறானே முகம் தெரியாத‌ ஒரு இராணுவ வீரன் அவனை என்று இந்த தேசம் உரிய முறையில் எண்ணிப் பார்க்கிறதோ, அன்று இந்த தேசம் உயரும்.

ஜெய் ஹிந்த்



எனக்கு பிடித்த நிஜ மனிதர்கள் - ராம ராமானுஜ ஆச்சாரி

கிறிஸ்துவராய் பிறந்தார், ஹிந்துவாய் மலர்ந்தார் !

யார் இந்த வெள்ளைக்காரர் என்று நீங்கள் பார்ப்பது தெரிகிறது. இவர் ஒரு கிறிஸ்துவ தந்தைக்கும், யூத தாய்க்கும் பிறந்தவர். தென் ஆப்ரிக்காவில் பிறந்து கிறிஸ்துவ ஞானஸ்தானம் பெற்றார். பின் இஸ்ரேல் சென்ற இவர், அங்கு பத்து வருடங்களுக்கு மேலாக யூதமதம், கிறிஸ்துவ மதம் மற்றும் இஸ்லாமிய மதங்கள் குறித்த தத்துவ கோட்பாடுகளை படித்தார். பின்னர் பாரதம் வந்து மூன்று வருடங்கள் சமஸ்க்ருதம் பயின்று, யோக வேதாந்தத்தையும், தத்துவங்களையும், ஜோதிடத்தையும், தர்க்க சாஸ்திரத்தையும் கற்று அறிந்தார். ரிஷிகேஷ், திருப்பதி, சென்னை மற்றும் வாரணாசிகளில் உள்ள குருகுல கல்வி மூலமாக இவர் இவற்றை பயின்றார்.

இவரை ஸ்ரீ வைஷ்ணவ ஆச்சாரியராக நியமணம் செய்தார், மறைந்த‌ ஸ்ரீமான் "வரத யதிராஜ ஜீயர்" ஸ்வாமிகள்.
இவரின் அர்பனிப்பு உணர்வை கண்டு மகிழ்ந்த ஜீயர் ஸ்வாமிகள், ம‌ற்றவர்களுக்கு தீக்ஷை கொடுக்க இவரை பணித்த‌தோடு மட்டும் இல்லாமல், கோவில்களில் குருக்களாகவும், வாழ்வியல் ரீதியான (உம் ஹோமங்கள், யாகங்கள்) சடங்குகளை செய்யக்கூடிய புரோகிராக செயலாற்றி, தர்மத்தை பரப்புமாறு இவரை பணித்தார்.
1982ல் ஆஸ்த்ரேலியாவுக்கு சென்ற இவர் அங்கு ஹிந்து பண்டிதராகவும், ஆசிரியராகவும் வேதாந்த தத்துவங்களை பலருக்கு கற்றுக் கொடுத்தார். அமேரிக்கா, தென் ஆப்ரிக்கா, பாலி தீவுகள் என இவர் பல இடங்களுக்கு சென்று தர்ம நெறிகளை பரப்பினார்.
ஆச்சார்யா ஸ்ரீ ராம ராமானுஜர், ஆஸ்த்ரேலியா, அமெரிக்கா மற்றும் "பாலி"யில் பல யோக பள்ளிகளிலும், தத்துவ கருத்தரங்களிலும் பெரிதும் ஈடுபட்டு வருகிறார். இவர் ஆங்கிலம், சமஸ்க்ருதம், ஹிந்தி, ஹிப்ரு, அரபி (பேச்சு மொழி) ஆகியவற்றில் புலமை வாயந்ததோடு மட்டுமில்லாமல் நம் தமிழிலும் சரளமாக பேசக் கூடியவர்.
ஒருவன் பிராமணனாக இருப்பதற்கு, அவர்களின் பிறப்பு ஒரு காரணி இல்லை என்பதற்கு ஸ்ரீ ராமானுஜ ஆச்சார்யா சிறந்த உதாரணம். இத்தகைய முன் உதாரணங்களை உண்டாகிய ஜீயர் ஸ்வாமிகளின் பாதமலர் பணிகிறேன். இத்தகைய சிந்தனையால்தான் ஹிந்து மதம் மேலும் மேலும் விரிவடையவும், நம் உயரிய சித்தாந்தங்கள் உலகம் முழுவது பரவும். ஜாதி, நிறம், மொழி வித்யாசம் இல்லாமல் அனைத்து மனிதர்களும் இறை தொண்டாற்றலாம் என்ற கோட்பாட்டை கொண்ட ஸ்ரீ வைஷ்ணவத்தை நிறுவிய ஸ்ரீமத் ராமானுஜரின் உயரிய எண்ணம் மேலும் மேலும், ஸ்ரீ ராம ராமானுஜர் ஆச்சாரி போன்றவர்கள் மூலமாக நடைபெறுவது உறுதி.
எனக்கென்னவோ இவரின் புகைப்படத்தை பார்த்தால், இவர் திராவிட மலங்களையும், ஹிந்து மதத்தை விட்டு மதம் மாறியவர்களையும் பார்த்து "ஹிந்து தர்மத்தை பற்றி என்னடா உங்களுக்கு தெரியும் ?, மூளை சலவை செய்யப்பட்ட முண்டங்களே !" என்று ஒரு ஏளன புன்ன‌கை பூப்பது போல் உள்ளது.

எனக்கு பிடித்த நிஜ மனிதர்கள் - அப்துல் கலாம்


"அவுல் பகிர் ஜைனுலப்தீன் அப்துல் கலாம்" என்ற அந்த ஏழை சிறுவன் ராமேஸ்வரத்தில் வீடு வீடாய் சென்று பேப்பர் போட்டு கொண்டிருந்த போது, பிற்காலத்தில் இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் செல்லும் ஏவுகனைகளை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுவான் என்று யாரும் நினைக்கவில்லை. இந்தியாவின் உயர்ந்த விருதான "பாரத ரத்னாவை" பெறுவான் என்றும், இந்தியாவின் உயர்ந்த பதவியான "ஜணாதிபதி" பதவியை அடைவான் என்றும் யாரும் நினைக்கவில்லை. ஆனால் அது நடந்தது.

அந்த சிறுவனிடத்தில் என்ன இருந்தது ? மற்றவர்களிடத்தில் என்ன இல்லை ?

அந்த சிறுவனிடத்தில் அழிக்க முடியாத கணவுகள் இருந்தன. விலை மதிப்பற்ற கணவுகள், அதை எப்படியும் அடைந்தே தீரவேண்டும் என்ற லட்சியமும், விடாமுயற்சியும்.

கலாமின் வாழ்கை, ஒரு சாதாரணவனுக்கு எழுச்சியூட்டும் ஒரு புரட்சிக் கவிதை. இராமேஸ்வரத்தின் பஞ்சாயத்து எலிமென்டரி பள்ளியில் படித்துக் கொண்டிருந்த கலாம் தன் கனவுகளின் விதைகளை அங்குதான் வாங்கினார். "முத்து ஐயர்" எனும் ஆசிரியர் கலாமிற்கு நல்ல பழக்க வழக்கங்களையும், உயர்ந்த நோக்கங்களையும் விதைத்தார்.

அவரின் பத்தாம் வயதில், ஐந்தாவது படிக்கும் போது, "ஸ்ரீ சிவ சுப்ரமணிய ஐயர்" எனும் ஆசிரியர் கரும் பலகையில் பறவைகள் எப்படி பறக்கின்றன என்று வரைபடம் வரைந்து விளக்குகிறார். அது புரிந்ததா என்று கேட்கும் போது கலாம் தனக்கு புரியவில்லை என்று நேர்மையுடன் சொல்ல, ஆசிரியர் அவர்களை மறுநாள் கடற்கரைக்கு அழைத்து செல்கிறார். பறவைகள் எப்படி இறக்கையை அசைகின்றன, எப்படி அதன் மூலம் சக்தியை உண்டாக்கி எழும்புகின்றன என்று விளக்குகிறார். எப்படி அவைகளின் இறகு பகுதியும், வால் பகுதியும் இனைந்து செயலாற்றுகின்றன என்றும் விளக்குகிறார். இதை சொல்லிவிட்டு அவர் ஒரு கேள்வி கேட்கிறார். "பறவைகளின் உடலில் "எஞ்சின்" எங்கு உள்ளது ? அதற்கு ஆற்றல் எங்கிருந்து கிடைக்கிறது" ? என்று. பின்னர் அவரே அதற்கு விளக்கமும் தருகிறார். "பறவையின் எஞ்ஜினும் ஆற்றலும் அதன் தேவைகளினால் ஏற்படும் உந்துகோளினால் தான்" என்று. அப்துல் கலாம் பின்நாளில் இந்த சம்பவத்தை குறிப்பிட்டு, அது வெறும் பறவைகள் பறப்பதை பற்றிய புரிதலாக எனக்கு இல்லை, விண்ணில் பறப்பதை குறித்து மேலும் நிறைய படிக்க வேண்டும் என்கிற கனவின் தொடக்கம் என்கிறார்.

கனவு கானுங்கள் என்பதை பலர், எந்த முயற்சியும் இல்லாமல் சோம்பேறித் தனமாக மனதில் அசைப் போடுவது என்று நினைக்கக் கூடும். மாறாக கனவு என்பதன் விளக்கத்தை அறிஞர் அப்துல் கலாமே சொல்கிறார்.

"கனவுகள் உறங்கும் போது நீங்கள் காண்பது அல்ல. மாறாக உங்களை உறங்க முடியாமல் வைத்து, அதை அடைய போராட செய்வது". என்கிறார்.

எதை குறித்து கனவுகள் காணலாம் ? சிலருக்கு நாலு பேரை அழிப்பது கணவாய் இருக்கலாம். சிலருக்கோ தன்னை மட்டுமே உயர்த்தி கொள்ளும் சுயநலக் கனவுகளும் இருக்கலாம். ஆனால் தானும், தான் சார்ந்த நாட்டையும் உயர்த்திட எத்தனை பேர் கனவு கண்டிருப்பர் ? மேதகு கலாம் அவ்வாறு கண்டார்.

கலாமின் தந்தை "ஜைனுலப்தீன்" படகுகளை வாடகைக்கு விடும் ஒரு ஏழை இஸ்லாமியர். கலாம் சைவ உணவையே உட்கொள்வார், எந்த வித தீய பழக்கங்களும் இல்லாதவர். அவரின் தேசப்பற்று எல்லையில்லாதது. அவரின் தேசப் பங்களிப்பை குறித்து சொல்லிக் கொண்டே போகலாம். மெட்ராஸ் இண்ஜினியரிங்க் டெக்னாலஜியில், "ஏரோனாடிகல் இண்ஜினியரிங்கில்" பட்டம் பெற்ற கலாம், இஸ்ரோ மற்றும் டி ஆர் டி ஒ ஆகிய அமைப்புகளில் பரிபுணிந்தார். அவர் ந‌ம் இராணுவத்தை தன்னிறவு பெறச் செய்வதில் பெரும் பங்காற்றி உள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். வாஜ்பாய் அரசால் செய்யப்பட்ட போக்ரான் அனுகுண்டு பரிசோதனையிலும், இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனைகளை உருவாக்குவதிலும் கலாம் முக்கிய பங்காற்றினார். ஆனால் கலாம் அவர்கள் தொழில் நுட்பத்தை வெறும் இராணுவ உபயோகத்திற்கு மட்டும் நிறுத்தவில்லை. பொதுமக்களுக்கு பயன் பெறும் வண்ணமும் உயர்ந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தினார்.

அக்னி ஏவுகணைக்காக‌ உயர் தொழில் நுட்பத்தின் உதவியோடு கண்டுப்பிடிக்கப்பட்ட இலகுவகை "கார்பன்' சாதணங்களை, போலியோவில் கால்களை இழந்தவர்களுக்கு, செயற்கை கால்களை தயாரிப்பதில் அவர் உபயோகித்தார். நான்கு கிலோ எடையில் இருந்த செயற்கை கால்கள், இதனால் வெறும் நானூறு கிராம் எடைக்கு குறைந்தது. கலாம் "கிரீஸ்" நாட்டின் "ஏதண்ஸ்" நகரில் பேசுகையில் இதை குறிப்பிடுகிறார். "அந்த சிறுவர்கள், அந்த இலகுவகை செயற்கை கால்களை பொறுத்திக் கொண்டு ஓடுகையில் அவர்களின் பெற்றோர்கள் கண்களில் ஆணந்த கண்ணீர் வழிந்தது. அதுதான் என் வாழ்க்கையின் மிகப்பெரும் ஆணந்தம்" என்று.

கலாம் இந்தியா முழுதும் சுற்றி பல மாணவர்களோடு கலந்தாய்வு செய்து அவர்களை ஊக்குவித்தார். குறைந்த விலையில் மருந்துகள் கிராமங்களிலும் கிடைக்க வேண்டும் என்பதை முன்மொழிந்தார். தொழில் நுட்ப வளர்ச்சியே ஒரு நாட்டின் மிகப்பெரும் பலம் என்று அவர் நம்புகிறார். தனியார் மற்றும் அரசு நிறுவணங்கள் ஒன்றினைந்து தொழில்நுட்ப வளர்ச்சியில் பங்காற்றிட வேண்டும் என்பது அவர் வாதம்.

ஜணாதிபதியாக இருந்த போதும், எந்த பகட்டும் காட்டாத எளிய மணிதர். அவரின் எளிமையை குறித்து நிறைய சம்பவங்களை சொல்லிக் கொண்டே போகலாம். கலாம் மதங்களை கடந்த நல்ல இஸ்லாமியர். கீதை, திருக்குறள் மற்றும் பல இலக்கியங்களிலும் புலமை பெற்றவர். நன்றாக வீணை வாசிக்க கூடியவர்.

கலாமின் அக்னி சிறகுகள் என்ற புத்தகம் ஒவ்வொருவரும் படிக்க வேண்டியது. 2020 இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற லட்சியத்தை நம்முன் விதைத்தவர்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக மிகச் சிறந்த மணிதர்.

அற்புதமானவனே அப்துல் கலாம் !! உமக்கு என் சலாம்.

No comments: