மஹா சிவராத்திரி விழிப்புணர்வின் வாசல் !!


இந்த அம்மாவாசை இரவில்தான் சிவபெருமான் சிவதாண்டவம் புரிந்ததாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. சிவதாண்டவம் என்பது வெறும் நடணம் அல்ல. இது சிவனின் எல்லையற்ற தன்மையை குறிக்கிறது. இது "ஆணந்த தாண்டவம்" என்றும் சொல்லப்படுகிறது. இந்த நடணம் எல்லையற்ற சக்தியின் ஐந்து தண்மைகளாகிய படைத்தல், காத்தல், அழித்தல், முக்தி மற்றும் மாயையை குறிக்கிறது.


உலகம் உண்டாக்கப்பட்ட போது பார்வதி சிவ பெருமானை எது சிறந்த நாள் என்று கேட்டபோது, இந்த நாளை தான் சிவன் பரிந்துரைத்தாராம்.

இந்த நாளில் தான் அசுரர்களும் தேவர்களும் பாற்கடல் என்கிற‌ சமுத்திரத்தை, "மந்தார மலை" எனும் மத்தை ஒரு ஆமையின் மீது அமர்த்தி, "வாசுகி" எனும் பாம்பை கயிறாக்கி, அதனை கடையும் போது, ஆலகால விஷம் வெளிப்பட்டது. அசுரர்களும், தேவர்களும் செய்வதறியாது திகைத்தனர். உலகமே அழிவின் விளிம்பிற்கு வந்தது. பரமசிவன் உலகை இரட்சிக்க அந்த கொடிய விஷத்தை தன் கழுத்தில் அடக்கி உலகை காப்பாற்றினார்.

இது என்ன கதை ? ஹிந்து தர்மத்தில் பாமரனுக்கு ஒரு கதை இருக்கும், ஞானிகளுக்கு ஒரு தத்துவமும் இருக்கும்.

இந்த "சமுத்திர மந்தனம்" எனப்படும் கதை, நம்முள் இருக்கும் விழ்ப்புணர்வு நிலையை குறிக்கிறது. தேவர்கள் நம் சுகங்களையும், அசுரர்கள் நம் துக்கங்களையும் குறிக்கிறார்கள். சுக துக்கம் இரண்டையும் ஒன்றாக சேர்த்து, பாற்கடல் எனும் மனதை உள்முகமாக திருப்புவதை இது குறிக்கிறது. கடலில் அலைகள் ஓயாமல் வருவது போல், நம் மனதிலும் எண்ண ஓட்டங்கள் ஓயாமல் வருகின்றன அல்லவா ?

"மந்தாரா" என்பது வெறும் மலையின் பெயரல்ல, "மன்" என்றால் மனம், தாரா என்றால் தாங்குவது அல்லது ஒரே நிலையில் வைப்பது என்று பொருள் படுகிறது. ஆக மந்தாரா என்றால் மனதை ஒரு நிலைப்படுத்துவது எனப் பொருள்படும்.

வாசுகி எனும் பாம்போ, ஆசைகளை குறிக்கிறது. பல தலைகளை கொண்ட பாம்பு, பலவிதமான ஆசைகளை குறிக்கிறது.

இந்த மலையை எது தாங்குகிறது ? ஆமை வடிவில் உள்ள விஷ்னுவால். ஆமை ஒட்டுக்குள் நுழைந்து கொள்வது போல் நம் புலன்க‌ளை உள் வாங்கி ஒடுக்குவ‌தை அது குறிக்கிறது. ஆமை பொறுமைக்கு பெயர் போனது அது விடா முயற்சியையும் குறிக்கிறது.

மொத்தத்தில் சுக துக்கம் இரண்டையும் ஒன்றாக பாவித்து, புலன்களை அடக்கி, ஆசைகளை ஒடுக்கி, மனதை ஒருநிலைப்படுத்தினால் அமிர்தம் எனும் விழிப்புணர்வு நிலை கிடைக்கும் என்பதை இது உணர்த்துகிறது,

"ஆலகால விஷம்" நாம் மனதை ஒருநிலை படுத்துகையில் ஏற்படும் தடங்கல்கள், வேதனைகள், வலிகள் ஆகியவற்றைக் குறிக்கிறது. சிவன் விவேகம், பற்றற்ற தன்மை, ஆற்றல், பொறுமை, இடைவிடாத முயற்சி ஆகியவற்றை குறிக்கிறார். ஆகையால் ஒரு யோகி தனக்கு வரும் தடைகளை அத்தகைய‌ தன்மைகளை கொண்டு
விழிப்புணர்வு நிலையை அடைகிறார் என்பதை அது குறிக்கிறது.

இன்றைய தினத்தில் பக்தர்கள் விரதமிருக்கிறார்கள். 'ஓம் நமச்சிவாய' என்ற பஞ்சாட்சர மந்திரத்தை இரவு முழுதும் உச்சரிக்கிறார்கள். இது யஜுர் வேதத்தில் வரும் "ஸ்ரீ ருத்ர சமகத்தில்" ஒரு பகுதியாகும். இது "மங்கள‌மானவரை வழிபடுகிறேன்" என்று பொருள் பெரும்.

பிரபஞ்சத்தின் மூலாதாரத்தை குறிக்கும் சிவலிங்கத்தை நீர், பால் மற்றும் தேனால் அபிஷேகம் செய்து, அதற்கு தூய சந்தனத்தை பூசி, எல்லாவற்றின் முடிவை குறிக்கும் திருநீற்றை அதற்கு இட்டு, வழிபடுவது வழக்கம்.

ஞாணத்தை குறிக்கும் விளக்கை ஏற்றி நம் உள் உறைந்திருக்கும் விழிப்புணர்வை தூண்டுமாறு ப்ரார்தித்தால் சாலச் சிறந்தது.

"ஓம் நமச்சிவாய" !!

No comments: