எண்ணுகிறேன் - எழுதுகிறேன். - தொடர்சி இல்லாத ஒரு தொடர் !!


யேசு தன்னுள் இறங்கி அதை அனுபவித்து இருப்பதாக மார்தட்டி கொள்ளும் ஒரு நண்பர் அடிக்கடி கேட்பார் "எதுக்குப்பா உங்க ஆளுங்க சாமியாடறாங்க, தீ மிதிக்கிறாங்க ? எல்லாம் மூட நம்பிக்கைகள்" என்பார். அவற்றுக்கு எத்தனை விளக்கம் சொன்னாலும் அது உள்ளே செல்லாதவாறு மனோவசியத்தால் மனத்திரை இடப்பட்ட நபர் அவர். ஒரு முறை அவர் தந்தை இறந்து விட நான் அதற்கு செல்ல வேண்டியிருந்தது. சவப்பெட்டிக்கு ஆர்டர் செய்திருந்தார்கள். அது எவ்வளவு விலையானாலும் பரவாயில்லை நல்ல தரமானதாக இருக்க வேண்டும் என்று அவரின் உறவினர் சொல்லிக் கொண்டிருந்தார். தரமான உயர்ந்த ரக மரத்தில் செய்யப்பட்ட சவப்பெட்டியில் ஒருவழியாக‌ அந்த பினம் வைக்கப்பட்டது. மீண்டும் அந்த பிணம் உயிர்தெழுவதற்காக அந்த பினம் எந்த தொந்தரவும் இல்லாத வகையில் கிடத்தப்பட்டது. இது நடந்து பல வருடங்கள் கடந்துவிட்டாலும் அது என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்திய‌து.

வாழும் போதெல்லாம் பொருள் சார்ந்த உலகையே முழு மூச்சாக கொண்டிருந்த மேற்கத்திய மக்கள், இறந்தும் கூட உடல் மீது கொண்டு மிகையான பற்றால் இப்படி பிண‌ங்களை பாதுகாக்கின்றனர். எங்கோ இரண்டாயிரம் ஆண்டுகள் முன்பு ஒருவர் இறந்து போய் மூன்று நாளில் உயிர்த்தெழுந்தார் என்கிற நம்பிக்கையில் உலகம் முழுவதும் பல நூறு வருடங்களாக‌, பல கோடி பிணங்கள் உயிர்தெழுவதற்காக காத்திருக்கின்றன. அழுகிப் போன உடல்கள், செல்லரித்து போன சடலங்கள், புழு பூத்து போன பினங்கள் என அனைத்தும் உயிர்தெழுவதற்காக காத்துக் கொண்டு இருக்கின்றன.

உயிர் போன பினங்கள், செல்லரித்து போன சடலங்கள் எப்படியடா உயிர்தெழும் ? என்று கேள்வி கேட்டு அவர்களின் நம்பிக்கைகளை நாம் எள்ளி நகையாடுவதில்லை. ஆனால், இறந்தவருக்கு தத்துவ ரீதியான சடங்குகளை செய்து விட்டு, பிண‌த்தை எரியூட்டிவிட்டு திரும்பிக் கூட பார்க்காமல் வரும் நம் உயர்ந்த சித்தாந்தங்களையும், கலாச்சாரத்தையும் இவர்கள் எள்ளி நகையாடுவதுதான் இவர்களின் மிகப்பெரும் அறியாமை.

சவப்பெட்டியில் வைத்தாலும் சரி, சேஃப்டி லாக்கரில் வைத்தாலும் சரி, ஆண்டாண்டு தோறும் அழுது புலம்பினாலும் சரி, மாண்டார் வருவாரோ ? என்பதெல்லாம் இவர்களுக்கு எங்கே புரியப் போகிறது ?


-------------------------------------------------------------------------------

இனி வருங்காலத்தில் மனிதனின் அறிவு மேலும் மேலும் முதிர்ச்சி அடைய தொடங்கும் வேளையில் உலகின் பெருவாரியானவர்களை இந்து தர்ம சித்தாந்தங்கள் ஈர்த்துக் கொள்ளும் என்றே நினைக்கிறேன். அறிவு செழுமை இல்லாத‌ பல பாமர மக்கள் கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மதங்கள் பால் செல்லக்கூடும் என்கிற அதே வேளையில், உலகில் உள்ள அனைத்து அறிவார்ந்த மக்களும் சனாதன தர்ம சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்ள தொடங்குவார்கள். மதம் மாறக்கூடாதுஎன்பதை கட்டாயமாக வைத்துள்ள சில இஸ்லாமிய நாடுகளை தவிர அனைத்து நாடுகளிலும் இந்த மாற்றம் ஏற்படும். இது தற்போதே நடந்து வரும் ஒரு உண்மை.

இதை நான் சொல்வது சிலருக்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் மனித மனம் வளர்ச்சியடைய தொடங்கும் வேளையில் உயர்ந்த சித்தாந்தங்கள் மட்டுமே எஞ்சி நிற்கும். "பொய் சொல்லாதே", "பகைவன் மேலும் அன்பு செய்" போன்ற வெறும் அறம் சார்ந்த, ஒரு சமூகத்தின் நாகரீகம் தொடக்கத்தில் இருக்கையில் போதிக்கப்படும் கருத்துக்களை அடிப்படையாக கொண்ட, மதங்கள், எத்தனை கோடி செலவு செய்தாலும் அறிவு செழுமை கொண்ட மக்களை ஈர்க்க இயலாது. ஆயிரம் தான் மற்ற மதங்கள் இந்து மதத்தின் "சாதி வேறுபாடு" போன்ற‌ நடைமுறை சார்ந்த பிரச்னைகளை முன் வைத்து பிரச்சாரம் செய்தாலும், அவர்களால் அதன் உயர்ந்த சித்தாந்தத்தை குலைத்து விட முடியாது. உலகின் ஈடு இனையற்ற சித்தாந்த சிகரங்களான வேத, வேதாந்தங்களும், பிரம்ம சூத்திரமும், கீதையும் வரும் காலங்களில் அனைத்து அறிவார்ந்த மக்களை தன்னகத்தே இழுத்து கொண்டு விடும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. இன்றைய உலகில் அறிவார்ந்த மக்களை ஈர்க்க கூடிய வகையில் சித்தாந்த செழுமை உள்ள மதங்கள் என்றால் அது சனாதன தர்மத்தை சேர்ந்த இந்து மத மற்றும் பௌத்த மத சித்தாந்தங்க‌ள்தான்.

இதற்கு முக்கிய காரணியாக இருக்கப் போவது, வரும் காலங்களில் பெருவாரியான மக்கள் அறிவு சார் விளக்கமில்லாமல் எதையுமே ஏற்றுக் கொள்ள போவதில்லை என்பதுதான். அதே வேளையில் இந்து மதம் உட்பட உலகில் உள்ள அனைத்து மதங்களிலும் உள்ள அறிவுக்கு பொருந்தமில்லாத இடைச்செருகல்கள், மாயாஜால கதைகள், மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் பெருவாரியான மக்களால் புறக்கனிக்கப்படும். தனி மனித சுதந்திரம் அதிகரிக்கும் வேளையில், மூளை சலவை செய்யப்படுவதும், கட்டாயப் படுத்தப்படுவதும் இயலாத ஒன்றாக மாறிவிடும். சித்தாந்த செழுமை கொண்ட‌, சுதந்திரத்தை முன் வைக்கக் கூடிய‌ சனாதன தர்ம‌மே மிஞ்சி நிற்கும்.

--------------------------------------------------------------------


மேனகா காந்தி சமீபத்தில் பேசுகையில் "ஜல்லிக்கட்டு என்பது மேற்கத்திய கலாச்சாரம்" என்பதாய் பேசியிருந்தார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டிருந்தேன். ஏனென்றால் பாரதத்தில் உள்ள ஒரு பகுதியில் உள்ள கலாச்சாரமும், பாராம்பரியமும் மற்ற பகுதிகளில் உள்ளவர்களுக்கு விளங்காமல் இருப்பதுதான் நம் தேசத்தின் சாபம். அதிலும் ஒரு மத்திய அமைச்சர் பதவியில் இருப்பவருக்கு இது தெரியாமல் இருப்பது விந்தையிலும் விந்தை.

தேசிய ஒருமைப்பாட்டிற்காக இந்தியை பரப்புவதில் தீவிரம் காட்டும் மத்திய அரசுகள், ஒரு தென்னகத்து அல்லது கிழக்கு பிராந்திய மொழியை வடக்கில் பரப்புவதற்கும் வழி வகை செய்ய வேண்டும். பாட புத்தகங்களில் உள்ளது உள்ள படியே பாரதத்தின் பழங்கால கலாச்சாரம், பாரம்பரிய பெருமைகள் மற்றும் பல்வேறு மொழிகளின் தொன்மைகளை குறித்து நாம் விளக்க வேண்டும்.

என்னை பொறுத்தவரை இந்தி எதிர்ப்பையும், மொழி வெறியையும் எவ்வளவுக்கு எவ்வளவு நான் எதிர்த்து பேசியுள்ளேனோ அதே போல் தான் தமிழின் தொன்மையையும், அதன் வரலாற்று சிறப்புகளையும் அறியாத மூடர்களின் கருத்துக்க‌ளையும் எதிர்த்து பேசியுள்ளேன்.

சமஸ்க்ருதத்தின் பெருமையை அறியாமல் அந்நிய சக்திகளின் துனை கொண்டு அதனை கண்மூடித்தனமாக எதிர்ப்பவர்கள் எப்படிப்பட்ட ஒரு கேடுகெட்ட செயலை செய்கிறார்களோ, அதற்கு இனையாகவே சமஸ்க்ருதம்தான் தமிழ் உட்பட அனைத்து மொழிகளின் தாய் மொழி என்று பேசுபவர்களும் செய்கிறார்கள். இந்த இரு கூட்டங்களுமே எந்த விதமான அடிப்படை ஆராய்ச்சிகளையும் படிக்காமலும், அறிந்து கொள்ளாமலும் பேசுபவர்கள்தான். இத்தகைய கூட்டங்கள்தான் பாரதத்தின் எதிரிகள்.

ஒரு மொழியை கற்றுக் கொள்வது என்பது ஒரு தனி மனிதனின் விருப்பம் மற்றும் அவசியத்தை பொறுத்ததே தவிர, ஒரு மொழியினால்தான் தேசிய ஒருமைப்பாடு ஏற்படும் என்பது முட்டாள்தனமான வாதம். பாரதத்தை ஒருங்கினைக்க எந்த ஒரு தனி மொழியினாலும் இயலாது, அதை ஒருங்கினைத்து வைத்துள்ளது நம் பண்பாடே என்பது என் ஆணித்தரமான கருத்து. பாரத பண்பாடுதான் நம் அனைவரையும் ஒருங்கினைக்கிறதே தவிர எந்த மொழியும் இல்லை.

இந்த பண்பாடுதான் தென் எல்லையில் இருப்பவரை கூட‌ வட கோடியில் உள்ள ரிஷிகேஷிற்கும், அமர்நாத் ஆலயத்திற்கும் செல்ல வைக்கிறது. வடக்கில் உள்ளவர்களை தென் கோடியில் உள்ள ராமேஸ்வரத்திற்கு வர வைக்கிறது. கிழக்கில் இருக்கும் காசிக்கும், பூரிக்கும், மேற்கில் உள்ளவர்கள் வருவது போல், மேற்கின் கடை கோடியில் உள்ள துவாரகாவிற்கும், சோமாநாதர் ஆலயத்துக்கும், கிழக்கு கோடியில் உள்ளவர்கள் செல்கிறார்கள். பாரதம் முழுதும் உள்ள பல்வேறு நதிகளும் மிக புண்ணிய நதிகளாக கொள்ளப்படுகிறது. அதனால்தான் காவேரி முதல் கங்கை வரை அனைத்து நதிகளும் புனிதமானதாக ஒவ்வொரு பாரதீயனாலும் போற்றப் படுகிறது.
இதுதான் நம்மை ஒருமைப்படுத்தும் மகா சக்தி. அந்த பண்பாட்டை குலைக்க நினைக்கும் ஒவ்வொன்றும் அழிந்து போவது உறுதி.


--------------------------------------------------------------------


தமிழகத்தின் கோவில்கள் பலவற்றிலும் கூட்டம் பெருகி வருகிறது. ஆனால் அது உண்மையான பக்தியா என்று யோசிக்க வேண்டி உள்ளது. "கேளுங்கள் கொடுக்கப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்" என்று வெள்ளைக்கார மதங்களின் சித்தாந்தங்கள் நம் மக்களையும் பிடித்துக் கொள்ள தொடங்கி விட்டன. எந்த கோவிலுக்கு போனால் தாங்கள் சேர்த்து வைத்துள்ள டண் கணக்கான பாவம் கழியும். எந்த கோவிலுக்கு போனால் என்ன பரிகாரம் கிடைக்கும், எதை தின்றால் பித்தம் தெளியும் என்றே அலைகின்றன பெரும்பான்மையான மக்கள் கூட்டம்.

சனாதன தர்மத்தின் அடிப்படையான "சர்வே சுகினோ பவந்து" எனும் "எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்" என்கிற சிந்தனை. அது இப்போது அரிதிலும் அரிதாக மாறி விட்டது. உலக நண்மைக்காக நடக்கப்படும் யாகங்களை பார்ப்பதே தற்போது அரிதிலும் அரிதாகி போய் விட்டது. அனைத்திலும் சுயநலம் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இறைவனை மளிகைக் கடைக்காரனாக பாவித்துக் கொண்டு பண்டமாற்றம் செய்யும் கூட்டங்களே அதிகரித்து வருகிறது.

இதனால்தான் வைகுண்ட ஏகாதேசி அன்று கூட‌ "அடியவனுக்கு அடியவன் நான்" என்கிற வைணவ சித்தாந்தத்தின் அடிப்படை குழி தோண்டி புதைக்க‌ப்பட்டு, பக்தர்கள் ஒருவர் மற்ற‌வரை பின்னுக்கு தள்ளி வைகுண்ட வாசலை நோக்கி ஓடுவதை பார்க்கிறோம். நான் நரகம் சென்றாலும் பரவாயில்லை மக்கள் அனைவரும் சுவர்கம் செல்ல வேண்டும் என்று நினைத்த "உடையவர் ராமானுஜர்" பாதம் பதிந்த திருத்தலங்களிலும் கூட சுயநலமே சுடர் விடுகிறது.

சிவனடியாருக்கு தொண்டு செய்வதே தலையாய தொண்டு என்கிற எண்ணம் காற்றில் விடப்பட்டு, சக பக்தர்களை புறந்தள்ளிவிட்டு முண்டியடித்து கோவிலுக்குள் செல்லும் மக்களை காண்கிறோம். சிவனடியார் ஒருவருக்கு தொண்டு செய்தால் அந்த சிவனுக்கே தொண்டு செய்ததற்கு மேல் என்பதை காற்றில் பறக்க விட்டு விட்டோம்.

தர்மம் என்பது எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று மனம் விரிவடைவதாகும், அதர்மம் என்பது நான் எனது என்று மனம் குறுக்கி போவதாகும். குறுகிய எண்ணத்தோடு எதை செய்தாலும், எத்தனை கோவில்கள் சென்றாலும் எந்த பயனும் இல்லை.

திருத்தலங்களுக்கு சென்றால் இறைவனை தரிசிப்பதை விட மேலானது, இறைவனை தரிசிக்க வந்துள்ள முதியோர்களுக்கும், பக்தர்களுக்கும் உதவி செய்வதுதான். திருத்தல பயணம் மேற்கொள்பவர்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவலாம், திருத்தலங்களில் பக்தர்களுக்கு வழிகாட்டலாம், வேறு பல உதவிகள் செய்யலாம். இதை எல்லாம் செய்தாலே போதும், இறைவன் நாம் இருக்கும் இடம் தேடி வந்து தரிசனம் தருவான்.

------------------------------------------------------------


மாற்று மதத்தவர்கள் தங்கள் மதத்தை பரப்புவதை எதிர்த்தும், ஏளனம் செய்தும் பேசும் நாம், ஈடு இனையற்ற நம் தர்மத்தை அடித்தட்டு மக்களுக்கு கொண்டு செல்ல என்ன செய்கிறோம் என்பதே கேள்வி.

பெரும்பான்மையான இந்துக்கள் தங்கள் பிள்ளைகளை பனம் சம்பாதிக்கும் இயந்திரமாக உருவாக்கவே விரும்புகிறார்கள். பலவிதமான‌ வசதிகளை பெருக்கிக் கொள்ளவே முனைகிறார்கள். தங்கள் பிள்ளைகள் வாரம் ஒருமுறையாவது நம் தர்மம் குறித்து தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று பலர் நினைப்பதில்லை. இதனால் என்னவாகிறது ??

நன்கு படித்து, நன்கு சம்பாதிக்கும் பிள்ளைகள் பெற்றோர்களை கண்டு கொள்வதில்லை. நம் சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் குறித்த அடிப்படைகள் எதுவும் அறியாமல் ஒரு கட்டத்தில் மாற்று மதத்தவர்களால் எளிதாக மதமாற்றம் செய்யப்படுகிறார்கள்.

கோவில்களிலோ, தர்ம வகுப்புகள் எடுப்பதற்கு இடம் கிடைப்பதில்லை. பெரும்பான்மையான கோவில்கள் நம் தர்மத்தை குறித்து பரப்பாமல் வெறும் சடங்குகள் நடைபெறும் இடமாகவே இருக்கிறது. ஆட்டு மந்தைகளாக பலர் கோவில்களில் வழிபாடுகள் நடத்துகிறார்கள். கோவில்களில் மண்படங்கள் கட்டப்படுவதே "சமய சொற்பொழிவுகள்" நடைபெறுவதற்காகதான். ஆனால் இன்று எத்தனை கோவில்களில் சமய சொற்பொழிவுகள் நடைப் பெறுகின்றன ? அப்படியே நடந்தாலும், இன்றைய இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் அது இருப்பதில்லையே ? ஏதோ வயதானவர்களுக்கு மட்டுமே சமய சொற்பொழிவுகள் என்கிற ரீதியில் அல்லவா பெரும்பாலும் நடக்கின்றன ?

ஒவ்வொரு ஞாயிறுகளிலும் சர்ச்சுகளில் நடக்கும் போதனைகள் மூலமாக‌ கிறிஸ்துவர்கள் தங்கள் வெள்ளையர் சித்தாந்தங்களை குறித்து அறிந்துக் கொள்கிறார்கள். கால் காசுக்கு ஆகாதவர்கள் கூட இந்த போதனைகளை கேட்டுவிட்டு நம்மவர்களிடம் கேள்வி கேட்கிறார்கள். எந்த சமய அறிவும் இல்லாத நம் மக்கள் எளிதான இலக்காக மாறிவிடுகிறார்கள்.

ஆக தர்ம வகுப்புகளுக்கு பிள்ளைகளை அனுப்ப பல பெற்றோர்கள் தயாராக இல்லை. தர்ம வகுப்புகளுக்கு இடம் கொடுக்க பல கோவில்கள் தயாராக இல்லை. ஆனால் இதெற்கெல்லாம் நாம் மனமுடைந்து விடுவோமா ? இடை விடாது "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்று ஒரு கருவியாக தர்மம் காக்க பணியாற்றிக் கொண்டே நாம் இருப்போம்.

No comments: